இந்தியா
பிரதமர் மோடி

புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடவில்லை - பிரதமர் மோடி உறுதி

Published On 2022-02-09 18:03 GMT   |   Update On 2022-02-09 18:03 GMT
இதுபோன்ற வழக்குகளில் புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கையால் தேசிய கருவூலத்தில் கோடிக்கணக்கான பணம் சேர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய புலனாய்வு அமைப்பு,  மத்திய அமலாக்க இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அவற்றின் விதிமுறைகளின்படி செயல்படுகின்றன. விசாரணை அமைப்புகளின் பணிகளில் அரசு தலையிடாது. 

இந்தியாவில் ஊழல் என்பது கரையான்கள் போல நாட்டையே பாதிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் எழுப்பவில்லையா? நான் ஒன்றும் செய்யவில்லை என்றால் மக்கள் மன்னிப்பார்களா? அரசு எங்கிருந்து (ஊழல் குறித்து) தகவல் பெற்றாலும் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதற்குப் பிறகு, நாட்டின் கருவூலத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வந்து கொண்டிருந்தால் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்தியாவில் தேர்தல்கள் நடக்கின்றன. ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்று முடிவு செய்யுங்கள், மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். அதில் அனைவரும் ஒன்றாக போட்டியிடுவோம்.  இதனால் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துவோம், பிறகு, நீங்கள் விசாரணை அமைப்புகளை பார்க்க மாட்டீர்கள்.  இவ்வாறு பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News