இந்தியா
கேரளா ஐகோர்ட்

சபரிமலைக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை - கேரள ஐகோர்ட்டில் தகவல்

Published On 2021-12-08 06:16 GMT   |   Update On 2021-12-08 06:16 GMT
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக தேவையான அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என அரசு போக்குவரத்து கழகம் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.இந்த நிலையில் தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் செல்கின்றனர்.

இந்த நிலையில் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பா சென்று வர வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் 375 சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

இந்த பஸ்களில் பக்தர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபரிமலை பக்தர்களின் வசதிக்காக தேவையான அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.


மேலும் கூடுதல் பஸ்கள் தமிழகத்தில் பழனி,கோயம்புத்தூர் மற்றும் தென்காசி பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. தற்போது மதுரை மற்றும் சென்னை பஸ்கள் விடப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ.56 மற்றும் ரூ.106 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அய்யப்ப பக்தர்களிடம் குறைந்த அளவில் ரூ.50 மற்றும் ரூ.80 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் 40 பக்தர்கள் இருந்தால் அவர்களுக்காக தனியாகவும் பஸ்கள் இயக்கப்படுகிறது என கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News