செய்திகள்

மோடி வாழ்க என்று கோ‌ஷமிட்டவர்களிடம் கை குலுக்கி ஓட்டு கேட்ட பிரியங்கா

Published On 2019-05-14 10:18 GMT   |   Update On 2019-05-14 10:18 GMT
மத்திய பிரதேச பிரசாரத்தில் மோடி வாழ்க என்று கோஷமிட்டவர்களிடம் கை குலுக்கி பிரியங்கா ஓட்டு கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலத்தின் சில தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து அந்த மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் ஒரே நாளில் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர்.

நேற்று காலை மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் மோடி பொதுக்கூட்டங்களில் பேசினார். நேற்று மதியம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்தார்.

இந்தூரில் அவர் ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அவர் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து ராஜ்மோகல்லா என்ற இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழிநெடுக சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று பிரியங்காவை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். ஒரு இடத்தில் பிரியங்காவின் கார் வந்த போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று பா.ஜனதாவுக்கு ஆதரவாக கோ‌ஷத்தை எழுப்பினார்கள்.

அவர்கள், “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்று கோ‌ஷமிட்டனர். பிரியங்காவை பார்த்ததும் அவர்களது இந்த கோ‌ஷம் அதிகரித்தது. ஆனால் பிரியங்கா அவர்களை பார்த்து சிரித்தப்படி கையசைத்தபடி சென்றார்.

ஆனால் சிறிது தூரம் சென்றதும் பிரியங்காவின் கார் நின்றது. அவரது கார் பின்னோக்கி வந்தது. மோடி வாழ்க என்று கோ‌ஷமிட்டவர்கள் நின்ற பகுதியில் அவரது கார் நிறுத்தப்பட்டது.

காரில் இருந்து இறங்கிய பிரியங்கா சிரித்தபடி அந்த கூட்டத்தினரிடம் சென்றார். அவர்களிடம், “உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். வாழ்த்துக்கள்” என்று கூறி கை குலுக்கினார். பிறகு சிரித்தபடி அவர்களிடம் இருந்து விடைபெற்று காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

பிரியங்கா திடீரென தங்களிடம் வந்ததும் பா.ஜனதா ஆதரவாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பிரியங்கா புறப்பட்டு சென்ற பிறகும் அவர்கள் இன்ப அதிர்ச்சியில் விடுபடவில்லை. பிரியங்காவின் எளிமையை பாராட்டிய படி கலைந்து சென்றனர்.

பிரியங்கா நேற்று மத்திய பிரதேசத்தில் இந்தூர், உஜ்ஜைனி, ரட்லம் நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்தூர், உஜ்ஜைனி நகரங்களில் ரோடு ஷோ நடத்தினார்.

ரட்லம் நகரில் பொதுக்கூட்டத்தில் பேச சென்ற போது பாதுகாப்பு வளையத்தை மீறி பெண்கள் இருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கிருந்த பெண்களிடம் அவர் கேள்விகள் கேட்டு பேசினார்.

அப்போது பெண்கள் பலர் அவர் அருகில் நின்று செல்பி எடுத்தனர். அதற்கு பிரியங்கா சிரித்தப்படி போஸ் கொடுத்து விட்டு சென்றார்.
Tags:    

Similar News