செய்திகள்

பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும்- அமித்‌ஷா நம்பிக்கை

Published On 2019-05-11 02:36 GMT   |   Update On 2019-05-11 02:36 GMT
பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கடந்த தேர்தலை விட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அமித்‌ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :

பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறும். கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

கடந்த தேர்தலில் வெற்றி பெறாத 120 தொகுதிகளில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கணித்தேன். அவற்றில் 55 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா பலவீனமாக இருந்த கடலோர மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் வெற்றி பெற்றுள்ளேன்.

அதன்படி, மேற்கு வங்காளத்தில் 33 தொகுதிகளுக்கு மேலும், ஒடிசா மாநிலத்தில் 12 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பெற்றதை விட அதிகமாக, அதாவது, 73 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்.

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அதை வரவேற்போம்.



பிரதமர் மோடி, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்பட தயாராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். யார் கிளம்ப வேண்டும் என்று 23-ந்தேதி தெரியும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சிக்கக்கூடாது என்றால், அவர் இந்திரா குடும்பத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தாலா? கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து ராகுலும், பிரியங்காவும் எவ்வளவு முயன்றாலும் தப்ப முடியாது.

தேசியவாதம்தான் பா.ஜனதா தொடங்கியதில் இருந்தே எங்களது உந்துசக்தி. அதை ஓட்டுக்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. முப்படைகளை நாங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். மோடி அரசு முடிவு எடுத்ததன் பேரிலேயே விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டது.

மோடி ஆட்சியில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில், விலைவாசி பற்றி பேசப்படாத ஒரே தேர்தல் இதுவாகும். இந்த பெருமை மோடி அரசையே சாரும்.

இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.
Tags:    

Similar News