செய்திகள்

அரசு பணியாகவே ராஜீவ் போர் கப்பலில் சென்றார் - ராகுல்

Published On 2019-05-10 10:19 GMT   |   Update On 2019-05-10 10:39 GMT
அரசு பணியாகவே ராஜீவ் போர் கப்பலில் சென்றார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். #RahulGandhi #PMModi

புதுடெல்லி:

பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, “ராஜீவ்காந்தி கடந்த 1987-ம் ஆண்டு ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலை தனது குடும்பத்தினர் பயணம் செய்யும் “டாக்சி” போன்று விடுமுறை கால பொழுது போக்குக்காக பயன்படுத்தினார்” என்றார்.

குறிப்பாக சோனியாவின் இத்தாலி நாட்டு உறவினர்கள் அந்த கப்பலில் பயணம் மேற்கொண்டதாக மோடி குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர்களும், 1987-ம் ஆண்டு கடற்படை தளபதியாக இருந்த ராமதாசும் மறுத்துள்ளனர். இந்த நிலையில் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

விடுமுறையில் பொழுதை கழிப்பதற்காக யாராவது விமானம் தாங்கி போர்க் கப்பலில் செல்வார்களா? அவர் சென்றது போர்க் கப்பல் அல்ல. மோடி வேண்டும் என்றே எனது குடும்பத்தினர் பற்றி விடாப்பிடியாக சில வெறித்தனமான கருத்துக்களை சொல்லி வருகிறார்.

1987-ம் ஆண்டு என் தந்தை ராஜீவ், கப்பலில் லட்சத் தீவுக்கு பயணம் மேற் கொண்ட போது நானும் உடன் சென்றேன். அந்த பயணம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் அல்ல. பிரதமர் என்ற முறையில் என் தந்தை மேற் கொண்ட அரசு முறை பயணமாகும்.

 


ஆனால் மோடி திட்டமிட்டு என் தந்தை, பாட்டி பற்றி தொடர்ந்து குறை கூறி வருகிறார். அவர் ஏதோ ஒரு நெருக்கடியில் சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது. அதனால்தான் என் குடும்பத்தினர் பற்றி இப்படி பேசி வருகிறார்.

என் குடும்பம் பற்றி எனக்கு அத்தகைய எண்ணம் இல்லை. ஆனால் என் மூதாதையர்கள் பற்றி பேசினால்தான் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி தப்பிக்கலாம் என்று மோடி நினைக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றாலும் எனது மூதாதையர்கள் பற்றி அவர் தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்க இயலாது. எனவே என் பெற்றோர், பாட்டி பற்றி மோடி கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு இனி நான் எந்தவித பதிலும் சொல்ல விரும்பவில்லை.

மோடி மட்டுமே தூங்காமல் இந்த நாட்டுக்காக உழைப்பது போல பேசுகிறார். இந்த வி‌ஷயத்தில் நான் பந்தயம் கட்ட தயார். மோடி இதுபற்றி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இதற்கிடையே ராஜீவ் பயணம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்களை முன்னாள் கடற்படை தளபதி ராம்தாசும் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1987-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் திருவனந்தபுரத்துக்கு வந்தார். பரிசளிப்பு விழா முடிந்ததும் அவர் அரசு முறை பயணமாக லட்சத்தீவுக்கு புறப்பட்டார்.

லட்சத்தீவில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஐ.என்.எஸ். விராட் கப்பல் வரவழைக்கப்பட்டது. அந்த கப்பலில் ராஜீவும் சோனியாவும் சென்றனர்.

ராஜீவுடன் அந்த கப்பலில் வெளிநாட்டுக்காரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. அந்த கப்பலில் ராஜீவ் பயணம் செய்த போது அனைத்து நடைமுறைகளும் சரியாக கடை பிடிக்கப்பட்டன.

எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. இந்த போர் கப்பலை ராஜீவ் தனது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தினார் என்று சொல்ல முடியாது.

இவ்வாறு கடற்படை முன்னாள் தளபதி ராம்தாஸ் கூறினார். இதே கருத்தை விராட் கப்பலின் முன்னாள் கமாண்டிங் அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்றொரு முன்னாள் கடற்படை அதிகாரியான வி.கே.ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜீவும், சோனியாவும் பங்காரம் தீவுக்கு விடுமுறை சுற்றுலா செல்ல போர் கப்பலை பயன் படுத்தினார்கள். இதற்காக கடற்படை பணம் அதிக அளவில் செலவிடப்பட்டது. விராட் கப்பலில் பணி புரிந்தவன் என்ற முறையில் அதற்கு நான் சாட்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார். #RahulGandhi #PMModi

Tags:    

Similar News