செய்திகள்

குண்டுவெடிப்பு வழக்கு - பெண் சாமியார் சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை இல்லை

Published On 2019-04-24 21:42 GMT   |   Update On 2019-04-24 21:42 GMT
குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை இல்லை என மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SadhviPragya #LokSabhaElection
மும்பை:

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தற்போது மத்தியபிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் எனக்கோரி, மாலேகான் குண்டுவெடிப்பில் மகனை இழந்த நிசார் சையது என்பவர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நிசார் சையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இது குறித்து நீதிபதி, ‘ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க இந்த கோர்ட்டுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. இது தேர்தல் அதிகாரிகளின் வரம்புக்கு உள்பட்டதாகும். எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டார்.   #SadhviPragya #LokSabhaElection
Tags:    

Similar News