செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம்: குமாரசாமி-சித்தராமையாவுக்கு நோட்டீசு

Published On 2019-04-13 07:24 IST   |   Update On 2019-04-13 07:24:00 IST
பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தியது குறித்து விசாரணைக்கு ஆஜராக முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை குறி வைத்து நடத்தப்படுவதாக கூறி கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

அன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும், 2 கட்சிகளின் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாருக்கு, வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன் புகார் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் மாநில போலீஸ் டி.ஜி.பி நீலமணி ராஜுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) பிளாக் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் மீது கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீசு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah 
Tags:    

Similar News