செய்திகள்

மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலில் இருந்து விலகுவேன் - தேவேகவுடா மகன் சவால்

Published On 2019-04-12 09:41 GMT   |   Update On 2019-04-12 09:41 GMT
மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் அரசியலில் இருந்து நான் விலக தயார் என்று தேவேகவுடா மகன் ரேவண்ணா சவால் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Revanna
மைசூர்:

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை மந்திரியாக தேவேகவுடாவின் மகன்களில் ஒருவரான ரேவண்ணா உள்ளார். நேற்று அவர் மைசூர் பகுதியில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 22 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். கர்நாடகாவில் எங்கள் கூட்டணிக்கு செல்வாக்கு இருப்பதை இதன் மூலம் நிரூபித்து காட்டுவோம்.

எங்களுடைய கட்சிக்கு 6, 8, 22 ஆகியவை மிகவும் ராசி நம்பர்களாகும். எனவேதான் 22 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்கிறேன்.

18 நம்பரும் எங்களுக்கு ராசிதான். எனவேதான் 2018-ல் குமாரசாமி முதல்-மந்திரி ஆனார்.

2018-ல் வரும் ஒன்றையும் எட்டையும் கூட்டினால் 9 வருகிறது. 2019-ல் தேர்தல் வந்துள்ளது. இந்த எண்கள்படி பார்த்தால் மத்தியில் நிச்சயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

என் கையில் நான் எப்போதும் எலுமிச்சை பழம் வைத்திருப்பதை கிண்டல் செய்கிறார்கள். எலுமிச்சை சாதாரண கனி அல்ல. பல வி‌ஷயங்களுக்கு எலுமிச்சை பயன்படுகிறது.

எங்களது குலதெய்வம் சிவபெருமான். எனவே சிவபெருமான் படத்துக்கு நான் தினமும் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டு வருகிறேன்.

இதனால்தான் நான் எங்கு சென்றாலும் எனக்கு எலுமிச்சை பழம் தருகிறார்கள். எடியூரப்பா விரும்பினால் அவருக்கும் நான் எலுமிச்சை பழம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

மோடியால் நிச்சயம் மீண்டும் பிரதமர் ஆக முடியாது. இதை நான் சவால் விட்டு சொல்கிறேன். அவர் மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் அரசியலில் இருந்து நான் விலக தயார்.

எனக்கும் என் சகோதரர் குமாரசாமிக்கும் எந்த தகராறும் இல்லை. அப்படி வரும் தகராறுகள் வதந்தி தான். வாழ்நாள் முழுக்க நாங்கள் ஒருபோதும் சண்டைப் போட்டுக் கொள்ள மாட்டோம். நாங்கள் சண்டை போடுவோம் என்று நினைத்தால் அது பகல் கனவாகி விடும்.

இவ்வாறு ரேவண்ணா கூறினார். #LokSabhaElections2019 #Revanna

Tags:    

Similar News