செய்திகள்

சந்திரசேகரராவ் எம்.பி. சீட்களை ரூ.100 கோடிக்கு விற்றார்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2019-04-10 08:53 GMT   |   Update On 2019-04-10 08:53 GMT
தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் ஒவ்வொரு தொகுதி சீட்டையும் தலா ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. #congress #chandrasekharrao #parliamentelection

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

தெலுங்கானா மக்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் மிக திறமையாக ஏமாற்றுகிறார்கள். மது மற்றும் பிரியாணி வாங்கி கொடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கிறார்கள்.

சில இடங்களில் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கி கொண்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இனியாவது மக்கள் ஏமாறக்கூடாது.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. அந்த கட்சியின் வேட்பாளர்கள் வங்கிகளை ஏமாற்றி பணம் வாங்கி இருக்கிறார்கள். சில வேட்பாளர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.


இவர்கள் சந்திரசேகரராவிடம் பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதி சீட்டையும் சந்திரசேகரராவ் தலா ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

இப்படி கோடி கணக்கில் கொட்டி கொடுத்து தேர்தலில் சீட் வாங்கி இருப்பவர்கள் அந்த பணத்தை வட்டியோடு திருப்பி எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் உங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

காங்கிரஸ் கட்சி மட்டுமே மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் தர உள்ளது. இதை நினைவில் கொண்டு தேர்தலில் வாக்களிக்கியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News