செய்திகள்

நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - வருமான வரி, அமலாக்கத்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2019-04-08 09:36 GMT   |   Update On 2019-04-08 09:36 GMT
வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. #ElectionCommission
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டு வாடாவைத் தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.

பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அளிக்கும் தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து இந்த சோதனை நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதலில் கர்நாடகாவில் குமாரசாமி உறவினர், கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில் பல கோடி ரூபாய் சிக்கியது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது. அதில் ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் கிடைத்தது.

நேற்று மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அதில் ரூ.14 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இத்தகைய சோதனைகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில், “வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். மேலும் யார் வீட்டில் சோதனை நடந்தாலும் நடுநிலையை கடை பிடிக்க வேண்டும்“ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

இது தவிர இனி சோதனை நடத்தும்போது தேர்தல் அதிகாரிகளிடம் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. #ElectionCommission
Tags:    

Similar News