செய்திகள்

பாஜக தோல்வி பயத்தால் வருமானவரி சோதனை நடத்தியது - கமல்நாத் குற்றச்சாட்டு

Published On 2019-04-08 06:08 GMT   |   Update On 2019-04-08 08:02 GMT
பாஜக தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினரை குறி வைத்து வருமானவரி சோதனை நடத்தியதாக கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார். #kamalnath
போபால்:

மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 11 கோடி பணம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக கமல்நாத் கூறியதாவது:-

மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக தனது எந்திரத்தை எதிர்க்கட்சியினரை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

5 ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனையை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

இந்த தோல்வி பயத்தால் தான் வருமான வரித்துறையினரை ஏவி எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்துகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இதைத்தான் செய்தார்கள். இப்போதும் அது தொடர்கிறது.



பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம்  செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் தக்க பதில் சொல்வார்கள்.

இவ்வாறு கமல்நாத் கூறினார்.

இது சம்பந்தமாக பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறும் போது ‘மம்தா பானர்ஜி வழியில் கமல்நாத்தும் செயல்பட ஆரம்பித்துள்ளார். வருமான வரித்துறை கடமையை செய்கிறது. அதை விமர்சிப்பது ஒரு முதல்-மந்திரிக்கு அழகல்ல. வருமான வரி சோதனையில் பணமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்’ என்றார். #kamalnath
Tags:    

Similar News