செய்திகள்

கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - கவர்னருக்கு காங்கிரஸ் கடிதம்

Published On 2019-03-16 12:53 GMT   |   Update On 2019-03-16 12:53 GMT
கோவாவில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் காலமானதால் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. #Congressstakesclaim
பனாஜி:

கோவா சட்டசபையில் உள்ள 40 இடங்களில் முன்னர் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக 13 சொந்தக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

முன்னாள் ராணுவ மந்திரியான மனோகர் பரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பிரான்சிஸ் டி சோசா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 14-2-2019 அன்று காலமானார். இதனால், ஆளும்கட்சியான பாஜக சட்டசபையில் தற்போது ஒரு உறுப்பினரை இழந்துள்ளது. இதுதவிர 2 இடங்கள் ஏற்கனவே காலியாக உள்ளது.



இந்நிலையில், ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களைஅழைக்க வேண்டும் என கோவா கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவா சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான சந்திரகாந்த் கவுலேக்கர், கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மைனாரிட்டி அரசாக மாறிப்போன பாஜக தலைமையிலான ஆட்சியை உடனடியாக கலைத்து விட்டு, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, கோவாவில் கவர்னர் ஆட்சியை திணிக்க முயன்றால் அது சட்டவிரோதமாக அமைந்து விடும். அப்படி ஏதும் நடந்தால் இவ்விவகாரத்தை காங்கிரஸ் கட்சி சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Congressstakesclaim  #Goagovernment 
Tags:    

Similar News