செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல்

Published On 2019-03-10 13:55 GMT   |   Update On 2019-03-10 13:55 GMT
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 21 உறுப்பினர்கள் பதவிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. #Bypolls #TNassemblyBypolls
புதுடெல்லி:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓ.பிஎஸ், தினகரன் அணியாக பிரிந்து பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி, தினகரன் எதிர் அணி என்று மாறியது. கட்சியும் சின்னமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிறுவினார் தினகரன். அவரது அணியை ஆதரித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ப்படுவதாக தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதனால், சென்னை பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர்,விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

திருவாரூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் உயிரிழந்ததால் இந்த தொகுதிகளும் காலியாக உள்ளன.

மேலும், ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டது. இதனால், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அன்றைய தினத்தில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் 26-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை 27-ம் தேதி நடைபெறும். #Bypolls #TNassemblyBypolls 
Tags:    

Similar News