செய்திகள்

காஷ்மீர் எல்லையில் 4 இடங்கள் மீது தாக்குதல் - பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

Published On 2019-03-10 10:45 GMT   |   Update On 2019-03-10 11:27 GMT
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் எல்லையில் உள்ள 80 கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் இன்று அத்துமீறலில் ஈடுபட்டது.

பூஞ்ச் மாவட்டத்தில் 4 இடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை 4.30 மணி முதல் தாக்குதல் நடத்த தொடங்கினர். கிராமங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. காலை 7.30 மணி வரை இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

Tags:    

Similar News