செய்திகள்

இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் - சவுதி இளவரசர் அறிவிப்பு

Published On 2019-02-20 09:50 GMT   |   Update On 2019-02-20 09:50 GMT
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது. பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் என சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree
புதுடெல்லி:

சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பில் சல்மான் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, இருநாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்த ஒப்பந்தத்தையடுத்து, சவுதி இளவரசரும் பிரதமர் மோடியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய மோடி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ள சவுதி அரசை வரவேற்பதாகவும் இந்தியா-சவுதி இடையிலான ராணுவ கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், ‘தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்தை வேரறுக்க உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்புநாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய உங்களுடன் ஒன்றிணைந்து நாங்கள் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என்னும் இந்தியாவின் நிலைப்பாட்டை சவுதி அரேபியா ஆதரிக்கின்றது. இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் எனவும் சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree 
Tags:    

Similar News