செய்திகள்

பாய்ந்தது எஸ்மா - உ.பி.யில் அரசு, நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்த 6 மாதங்களுக்கு தடை

Published On 2019-02-05 10:53 GMT   |   Update On 2019-02-05 10:53 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #UPgovt #ESMAinUP
லக்னோ:

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும்பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்.

இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

தபால், விமான நிலையம், துறைமுகம், ரெயில்வே உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கான சேவைகள் பாதிக்காத அளவில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சட்டம் அமலில் இருக்கும்போது போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தக்கோரி அம்மாநில அரசு பணியாளர்கள் நாளை முதல் (6-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசின் தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே இதற்கான உத்தரவை நேற்றிரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #UPgovt #ESMAinUP
Tags:    

Similar News