செய்திகள்

விவசாயிகளுக்கான உதவித் தொகை அடுத்த மாதம் கிடைக்கும் - மத்திய மந்திரி தகவல்

Published On 2019-02-04 15:21 IST   |   Update On 2019-02-04 15:21:00 IST
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரம் அடுத்த மாதம் கிடைக்கும் என மத்திய மந்திரி கஜேந்திர செகாவாத் தெரிவித்துள்ளார். #GajendraShekhawat
புதுடெல்லி:

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை இப்போதைய நிதியாண்டிலேயே (2018-19) முன்தேதியிட்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

இந்த தொகை அடுத்த மாதமே (மார்ச்) அனைத்து விவசாயிகள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய விவசாயத்துறை மந்திரி கஜேந்திரசெகாவாத் கூறியுள்ளார்.

நாட்டில் மொத்தம் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 12 கோடியே 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக உத்தரபிர தேசத்தில் 2 கோடியே 21 லட்சம் பேர் உள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை 4 மாதத்திற்கான தொகை ரூ.2 ஆயிரம் ஆகும். இந்த தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் அடுத்த மாதம் செலுத்தப்படும். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் (2019-20) இந்த திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்குகளை இணைத்திருந்தால் அதன் அடிப்படையில் பணத்தை செலுத்த உள்ளனர். ஆனால் பல விவசாயிகள் இவ்வாறு இணைக்காமல் உள்ளதாகவும் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் யார் என்பதை கணக்கிடுவதில் சிக்கல் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல மாநிலங்களில் டிஜிட்டல் ரீதியாக நிலப்பதிவேடுகள் செய்யப்படவில்லை. எனவே யார், யாருக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை வழங்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இதுபற்றி மத்திய மந்திரி கஜேந்திர செகாவாத் கூறும்போது, நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு பெரும்பாலான விவசாயிகளுக்கு நில சுகாதார அட்டை வழங்கி இருக்கிறது. அவர்கள் பற்றிய பட்டியல் முழுமையாக எங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் பணத்தை வழங்கி விடுவோம்.

முதல் தடவை சற்று சிரமமாக இருக்கலாம். அடுத்த தடவை அது எல்லாம் சரியாகி விடும். குறைந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் பட்டியலை மாநில அரசிடம் கேட்க இருக்கிறோம். எனவே எல்லா விவரங்களும் கிடைத்துவிடும். பணம் வழங்குவதில் பிரச்சினை இருக்காது என்று கூறினார். #GajendraShekhawat
Tags:    

Similar News