செய்திகள்

மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த நவீன் பட்நாயக்கின் சகோதரி

Published On 2019-01-26 22:20 GMT   |   Update On 2019-01-26 22:20 GMT
மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik
புவனேசுவரம்:

மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று கீதா மேதா அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவர், இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், “பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் என கருதி மத்திய அரசு என்னை தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இதனால் எனக்கும், அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், விருதை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik

Tags:    

Similar News