செய்திகள்

யார் வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் - போலீஸ் அதிகாரி ரூபா பேட்டி

Published On 2019-01-24 14:56 IST   |   Update On 2019-01-24 14:56:00 IST
சசிகலா விவகாரத்தில் தன் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறி உள்ளார். #Roopa
பெங்களூரு:

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வழக்கப்பட்ட வழக்கை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் நடத்திய விசாரணை அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று கூறப்பட்டு உள்ளது.

இதன்மூலம் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தற்போது தெரியவந்து உள்ளது.

ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சசிகலாவின் வக்கீல் அசோகன், கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரூபாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

என் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.

இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். என் கடமையை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்தது தொடர்பாக கர்நாடக உள்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Roopa
Tags:    

Similar News