செய்திகள்
நீதிபதி சிக்ரி

சிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம்- நீதிபதி சிக்ரியும் வழக்கு விசாரணையில் இருந்து விலகல்

Published On 2019-01-24 07:56 GMT   |   Update On 2019-01-24 07:56 GMT
சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.கே. சிக்ரியும் விலகியுள்ளார். #JusticeSikri #CBI
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு கடந்த 21-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகினார்.


புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம் பெற்று இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கை நீதிபதி சிக்ரி தலைமையிலான வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.கே. சிக்ரியும் விலகியுள்ளார். ஏற்கனவே தலைமை நீதிபதி விலகி இருந்த நிலையில் மற்றொரு நீதிபதியும் விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து வேறு ஒரு அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சி.பி.ஐ. புதிய இயக்குனரை இன்று மாலை தேர்வு செய்கிறது. இதற்கான இறுதிப்பட்டியலில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். #JusticeSikri #CBI
Tags:    

Similar News