செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் (பழைய படம்)

பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் மீது நடவடிக்கை

Published On 2019-01-23 09:23 GMT   |   Update On 2019-01-23 09:23 GMT
ஜலந்தர் பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaNuns #bishop
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அங்குள்ள கான்வென்டில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அதே கான்வென்டில் பணிபுரியும் 5 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பி‌ஷப்பை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 5 பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களை பழிவாங்கவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜலந்தர் திருச்சபை தலைவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான நீனா ரோஸ், திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், திருச்சபை மரபை மீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி உள்ளார்.

இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட 5 கன்னியாஸ்திரிகளும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரியும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaNuns  #bishop
Tags:    

Similar News