செய்திகள்

நடுத்தர பிரிவினருக்கு பயன் அளிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் - மத்திய அரசு முடிவு

Published On 2019-01-21 09:43 GMT   |   Update On 2019-01-21 09:43 GMT
நடுத்தர பிரிவினருக்கு பயன் அளிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #budget

புதுடெல்லி:

பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

இந்த அரசின் பதவி காலம் முடிந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் இதற்காக இந்தியா திரும்புகிறார்.

தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் பொதுப்பிரிவினருக்கு பொருளாதாரத்தில் (ரூ.8 லட்சம் வரை) பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த அளவு கோலின்படி பார்த்தால் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த அதிகமான வாய்ப்பு உள்ளது.

இதே போல கார்ப்பரேட் வரியும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம். மேலும் பல்வேறு பொருளாதார சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #budget

Tags:    

Similar News