செய்திகள்

லோக்பால் நியமனம் குறித்த ஆலோசனைகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் கெடு

Published On 2019-01-17 11:17 GMT   |   Update On 2019-01-17 11:17 GMT
லோக்பால் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் லோக்பால் தேடுதல் குழுவுக்கு கெடு விதித்துள்ளது. #Lokpal #SupremeCourt #PMModi
புதுடெல்லி:

பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனினும், இந்த சட்டத்தின் படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகின்றது.

லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் யார்? என்பதை பரிந்துரைக்க தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 



இந்த குழு லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேடி கண்டுபிடித்து அரசுக்கு பரிந்துரை செய்யும். இதனை அடுத்து, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் இந்த பரிந்துரைகளை இறுதி செய்த பின்னர், அவர்கள் பதவியில் நியமிக்கப்படுவார்கள். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லோக்பால் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், லோக்பால் நியமனம் தொடர்பான பெயர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழுவுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் வழங்க வேண்டும் என லோக்பால் தேடுதல் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Lokpal #SupremeCourt #PMModi
Tags:    

Similar News