செய்திகள்

ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் முறையீடு - சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2019-01-14 11:02 GMT   |   Update On 2019-01-14 11:02 GMT
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984  அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய்  பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன்,  நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளதால் சஜ்ஜன் குமாரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் மீது பரிசீலிக்கவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar 
Tags:    

Similar News