செய்திகள்

தேசத்துரோக வழக்கு - கண்ணையா குமாருக்கு எதிராக கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2019-01-14 10:20 GMT   |   Update On 2019-01-14 10:20 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசிய கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று கோர்ட்டில் 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #JNUSUpresident #KanhaiyaKumar
புதுடெல்லி:

பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர்.

அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.

கண்ணையா குமார் கைதை கண்டித்து டெல்லி மற்றும் வேறுசில பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும் வெடித்தது.


இந்நிலையில், கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய குற்றவியல் சட்டம் 124A 323, 465, 471,143, 149, 147, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக கோர்ட் நாளை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்ணையா குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கண்ணையா குமார் குறிப்பிட்டுள்ளார். #JNUSUpresident #KanhaiyaKumar 
Tags:    

Similar News