செய்திகள்

ஐயப்பனை தரிசிக்க ஆந்திராவில் இருந்து மேலும் 4 இளம்பெண்கள் சபரிமலை பயணம்

Published On 2019-01-12 06:31 GMT   |   Update On 2019-01-12 06:31 GMT
ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது.

கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலை சென்ற பெண்கள் பலரும் பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 கேரள பெண்கள் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.



கேரள பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கேரள அரசுக்கு மனு அனுப்பினர். இதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர பெண்கள் கோட்டயம் வந்துள்ளதாகவும், அங்கிருந்து எரிமேலி வழியாக பம்பை சென்று சன்னிதானம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து ஏற்கனவே பல பெண்கள் சபரிமலை வந்து பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர். இப்போது மேலும் 4 பெண்கள் சபரிமலை வந்திருப்பதாக வெளியான தகவல் சபரிமலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SabarimalaTemple

Tags:    

Similar News