செய்திகள்

பெண்கள் தரிசனம் செய்ததால் சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது

Published On 2019-01-02 05:20 GMT   |   Update On 2019-01-02 05:20 GMT
சபரிமலையில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகளை மீறி, கேரளாவைச் சேர்ந்த பெண்கள் சாமி தரிசனம் செய்ததையடுத்து சன்னிதானம் மூடப்பட்டது. #SabarimalaProtest #SabarimalaWomen
சபரிமலை:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.

கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி சென்றபோது பக்தர்களின் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், எப்படியும் சபரிமலையில் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்த இரண்டு பெண்களும், மீண்டும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகினர்.

இதையடுத்து நேற்று மீண்டும் அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு  இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். அவர்கள் 18 படி ஏறாமல் பின்வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

இதையடுத்து கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது. கோவில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே இருந்த பக்தர்களை போலீசார் வெளியேற்றினர். கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்த பிறகு நடை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaProtest #SabarimalaWomen
Tags:    

Similar News