செய்திகள்

உ.பி. அரசின் தலைமை செயலகத்தில் வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை - யோகி ஆதித்யாநாத்

Published On 2018-12-25 12:28 GMT   |   Update On 2018-12-25 12:28 GMT
உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில அரசின் தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும் என யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
லக்னோ:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தலைநகர் லக்னோ நகரில் நடைபெற்ற விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கவர்னர் ராம்நாயக் உள்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-



உத்தரப்பிரதேசம் மாநிலத்துடன் வாஜ்பாய் பலமான பிணைப்பை வைத்திருந்தார். இம்மாநிலத்தில் பல்ராம்பூரில் இருந்து தனது பொதுவாழ்வை தொடங்கிய அவர், லக்னோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்துள்ளார்.

தீன்தயாள் உபாத்யாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரிடமிருந்து அரசியல் பாடங்களை கற்ற வாஜ்பாய் நல்லாட்சி என்று சொல்லுக்கு அஸ்திவாரமாக விளங்கினார். அதனால்தான் இந்த மாநில அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளோம். 

அவரது நினைவுகளையும் புகழையும் நினைவுகூரும் வகையில் அரசு தலைமை செயலகத்தில் (லோக் பவன்) வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
Tags:    

Similar News