செய்திகள்

கேரளாவில் லாரியின் தார்பாய் கயிறு மொபட்டில் சிக்கி இளம் பெண் பலி

Published On 2018-12-24 15:40 IST   |   Update On 2018-12-24 15:40:00 IST
கேரளாவில் லாரியின் தார்பாய் கயிறு மொபட்டில் சிக்கி இளம் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பறாசாலை அடுத்துள்ள கொளத்தூரில் உள்ளது தும்புக்கல் லட்சம் வீடு காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 32). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தார்.

தனது சொந்த உழைப்பு மற்றும் கடன் வாங்கி அதே பகுதியில் புதுவீடு கட்டினார். புதுமனை புகு விழா அடுத்த வாரம் நடத்த இருந்தது. பல்வேறு வேலைக்கு செல்லும் அனிதா டாக்டர், வக்கீல்கள் வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மொபட்டில் கரமனா என்ற பகுதியில் உள்ள டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டார். அங்குள்ள பாலத்தில் சென்றபோது முன்னாள் திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றிய லாரி சென்றது.

திடீரென லாரியின் தார்பாயில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்தது. அவிழ்ந்த கயிறு அனிதா ஓட்டி வந்த மொபட்டின் கிக்கரில் சிக்கியது. அதிர்ச்சியடைந்த அனிதா சத்தம்போட்டார். அதற்குள் கயிறு இறுக்கி அங்குள்ள தடுப்பு சுவரில் மொபட் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்தவெள்ளத்தில் விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லாரியை நிறுத்தி அனிதாவை மீட்டனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பலியான அனிதாவுக்கு அங்கீதா, சமியா என்ற மகள்களும், அனுப் என்ற மகனும் உள்ளனர்.

கணவரை பிரிந்தாலும் உழைத்து கவுரவமாக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் 3 குழந்தைகளை படிக்க வைத்து புதுவீடு கட்டி வந்தார். அனிதாவின் இந்த திடீர் மரணம் துரதிஷ்டவசமானது என்று அந்த பகுதிமக்கள் கூறினர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த டிரைவர் சக்ரவர்த்தியை கைது செய்து அவர் மீது மனப்பூர்வ மற்ற கொலை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News