செய்திகள்

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு

Published On 2018-12-03 10:56 GMT   |   Update On 2018-12-03 10:56 GMT
மேகதாதுவில் அணை கட்டும் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. #MekedatuDam
புதுடெல்லி:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்தது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது.

ஆணையத்தின் தலைவர் மசூத்உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் பங்கேற்றார். இதே போல கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இது எதிரானது என்று தமிழகம் வாதிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. தற்போது 2-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. #MekedatuDam
Tags:    

Similar News