செய்திகள்

நீர்பாசன திட்டத்தை செயல்படுத்த மராட்டிய அரசுக்கு ரூ.500 கோடி கடன் கொடுக்கும் சாய்பாபா கோவில்

Published On 2018-12-02 10:02 GMT   |   Update On 2018-12-02 10:02 GMT
நீர்பாசன திட்டத்தை செயல்படுத்த மராட்டிய அரசுக்கு ரூ.500 கோடி நிதியை சாய்பாபா கோவில் வட்டியில்லா கடனாக வழங்குகிறது. #SaiBabaTemple

மும்பை:

நாட்டில் கோவில்கள் வருமானத்தில் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவில் முதலிடத்தில் உள்ளது. இந்த கோவிலின் மொத்த வங்கி இருப்பு தொகை ரூ.2,100 கோடியாகும்.

பக்தர்கள் காணிக்கை மூலம் தினசரி வருமானம் ரூ.2 கோடியாகவும், ஆண்டு வருமானம் ரூ.700 கோடியாகவும் உள்ளது.

நாள்தோறும் சராசரியாக 70,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். விழாக்காலங்களில் தினசரி பக்தர்கள் வருகை எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரிக்கும்.

இதற்கு அடுத்தப்படியாக தான் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், ஜம்முவில் வைஷ்ணவ தேவி கோவில் வருமானங்கள் உள்ளன.

இந்த கோவில் வருமானத்தை அந்தந்த மாநில அரசுகள் கடனாக பெற்று பயன்படுத்தி வருகின்றன. தற்போது மராட்டிய அரசு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.500 கோடி கடன் வாங்குகிறது.

மராட்டிய அரசு மிகப்பெரிய அளவில் கோதாவரி- மராத்வாடா நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.1,200 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மராட்டிய அரசு பல்வேறு வழிகளில் இருந்து நிதி திரட்டி வருகிறது.

அந்த வகையில் சீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட் நிதியில் இருந்து ரூ.500 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சாய்பாபா கோவில் டிரஸ்ட்டும், கோதாவரி- மராத்வாடா நீர்ப் பாசன கழகமும் கையெழுத்திட்டுள்ளது.

ஏற்கனவே சாய்பாபா கோவில் நிதியில் இருந்து ரூ.500 கோடி கடன் வாங்குவதற்கு முதல்- மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரூ.500 கோடி நிதியை சாய்பாபா கோவில் வட்டியில்லா கடனாக வழங்குகிறது.

இதற்கு முன் மராட்டியத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரிகள் மேம்பாட்டுக்கு சாய்பாபா கோவில் ரூ.71 கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. #SaiBabaTemple

Tags:    

Similar News