செய்திகள்

தெலுங்கு தேசம் எம்எல்ஏ திடீர் ராஜினாமா

Published On 2018-12-01 07:33 GMT   |   Update On 2018-12-01 07:33 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.ராவல கிஷோர்பாபு திடீரென பதவி விலகினார். #TeluguDesamMLA

நகரி:

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ராவல கிஷோர்பாபு. இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தை முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி இருக்கிறார்.

கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும், கடந்த சில மாதங்களாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறி அவர் தனது எம்.எல்.ஏ. பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

 


2014-ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ராவல கிஷோர்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சந்திரபாபு நாயுடுவின் மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

அதன்பின் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது கிஷோர்பாபு நீக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இதற்கிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

கிஷோர்பாபு தனது ஆதரவாளர்களுடன் நாளை நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.

திருப்பதி சென்றுள்ள ஆந்திர சபாநாயகர் சிவபிரசாத் ராவ் கூறும்போது, “கிஷோர்பாபு எம்.எல்.ஏ. எனது அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி இருக்கிறார். நான் திருப்பதியில் இருந்து சென்றதும் அந்த கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #TeluguDesamMLA

Tags:    

Similar News