செய்திகள்
கவர்னர் சதாசிவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்தித்து ஆலோசனை நடத்திய காட்சி.

சபரிமலையில் கெடுபிடிக்கு கவர்னர் கண்டிப்பு- பினராயி விஜயனை அழைத்து விளக்கம் கேட்டார்

Published On 2018-11-23 10:47 IST   |   Update On 2018-11-23 10:47:00 IST
சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனை அழைத்து கவர்னர் சதாசிவம் விளக்கம் கேட்டார். #sabarimala #Sathasivam #PinaraiVijayan
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடாது, இரவு நேரத்தில் சன்னிதானத்தில் தங்க கூடாது, சரண கோ‌ஷம் எழுப்பக்கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

அதே போல பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மூலம் மட்டுமே அவர்கள் பம்பை செல்ல முடியும்.

இது போன்ற கெடுபிடிகள் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இதுவரை சபரிமலையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும்.

சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பக்தர்கள் குழுவாக செல்லவும் சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பவும் தடை விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

சபரிமலை சென்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாம் கேரள கவர்னர் சதாசிவம் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார்.

சபரிமலை செல்லும் அனைத்து அய்யப்ப பக்தர்களையும் குற்றவாளிகள் போல கருதக் கூடாது. பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி செய்து தாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். சபரிமலையில் தற்போதைய நிலவரம், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கவர்னரிடம், பினராயி விஜயன் விளக்கி கூறினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

கேரள ஐகோர்ட்டு மற்றும் கவர்னரின் தலையீட்டை தொடர்ந்து சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகள் சற்று குறைந்து உள்ளது. இனி அய்யப்ப பக்தர்கள் குழுவாக சபரிமலை செல்லவோ, சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பவோ, இரவு அங்கு தங்கவோ எந்த தடையும் கிடையாது.

அதே சமயம் சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வருகிற 26-ந்தேதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு சபரிமலையில் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கெடுபிடிகள் குறைந்துள்ளதால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. நேற்று தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்.


சபரிமலையில் கெடு பிடிகள் குறைந்துள்ளதைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் வருகை சற்று அதிகரித்துள்ளது. நேற்று வலியநடைபந்தல் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

சபரிமலை வரும் பக்தர்கள் அரவணை மற்றும் அப்பம் பிரசாதத்தை போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள். கடந்த ஆண்டு இந்த பிரசாதத்துக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் இந்த முறை 3 லட்சம் டின் வரை அரவணை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரவணை விற்பனை மிகவும் குறைவாகவே உள்ளது.  #sabarimala #Sathasivam #PinaraiVijayan
Tags:    

Similar News