செய்திகள்

ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலி

Published On 2018-11-20 07:20 GMT   |   Update On 2018-11-20 07:20 GMT
ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Rationcard #Ration

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள மகாயத்தினார் கிராமத்தை சேர்ந்தவர் காலேஸ்வர் சோரன்(45).

இவர் சாப்பிட உணவின்றி பட்டினியாக இருந்ததால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவினர் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது, அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரே‌ஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினி கிடந்து இறந்தது உறுதி செய்யப்பட்டது.

காலேஸ்வர் சோரன் தனது ஆதார்கார்டு நம்பரை ரே‌ஷன் கார்டில் சேர்க்காததால் கடந்த 2016-ம் ஆண்டு அவரது ரே‌ஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரது குடும்பத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை.

 


இதனால் தனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய விளை நிலங்களை அடமானம் வைத்தார். ஒரு ஜோடி காளை மாடுகளை விற்று செலவு செய்தார். அவரது 2 மகன்களும் ராஜஸ்தான் சென்று கடந்த 2 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகின்றனர்.

தனது தந்தை இறந்ததை அறிந்தும் கூட அவர்களால் வர முடியவில்லை. இந்த தகவலை உண்மை கண்டறியும் குழுவை சேர்ந்த சிராஜ்தத்தா தெரிவித்தார்.

இவரை போன்று மேலும் ஒரு பெண் பட்டினியால் மரணம் அடைந்து இருக்கிறார். அவரது பெயர் சீதா தேவி (75). இவர் இதே பகுதியில் உள்ள கும்ளா என்ற இடத்தை சேர்ந்தவர்.

காலேஸ்வர் சோரனும், சீதா தேவியும் கடந்த 25 நாட்களில் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். ஜார்கண்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 17 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக உணவு உரிமை பிரசார இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.#Rationcard #Ration

Tags:    

Similar News