செய்திகள்

திருப்பதி பஸ் நிலையங்களில் பயணிகள் போல் நடித்து நகை, பணம் திருடிய 2 இளம்பெண்கள் கைது

Published On 2018-11-19 11:34 GMT   |   Update On 2018-11-19 11:34 GMT
திருப்பதி பஸ் நிலையங்களில் பயணிகள் போல் நடித்து நகை, பணம் திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்களில் பயணிகளிடம் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக திருப்பதி குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார்கள் வந்தன. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் திருப்பதியில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மாதவம் தங்கும் விடுதி அருகில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த இரு இளம்பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும், கர்னூல் மாவட்டம் ஆத்மகூரு மண்டலம் சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரமணம்மா என்கிற சங்கீதா (வயது 22), அனிதா (19) எனத் தெரிய வந்தது. இளம்பெண்களான இருவரும், திருப்பதியில் உள்ள பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள்போல் நடித்து, சக பயணிகளிடம் நகை, பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான இரு இளம்பெண்கள் மீதும் திருப்பதி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News