செய்திகள்

மத்தியபிரதேச தேர்தல் - பா.ஜனதாவில் அதிருப்தி வேட்பாளர்கள் 62 பேர் போட்டி

Published On 2018-11-17 06:51 GMT   |   Update On 2018-11-17 06:51 GMT
மத்தியபிரதேச தேர்தலில் பா.ஜனதா அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து 62 பேர் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். #BJP #MadhyaPradeshelection

போபால்:

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

ஆளும் பா.ஜனதா கட்சி 230 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் பா.ஜனதாவில் கடும் அதிருப்தி நிலவியது.


இதனால் பா.ஜனதா அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து 62 பேர் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

முன்னாள் மந்திரியான ராமகிருஷ்ணா கெமாரியா தமோக் தொகுதியில் பா.ஜனதா அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளும் கட்சி வேட்பாளரை எதிர்த்து களத்தில் உள்ளனர். அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரஜனிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதிருப்தி வேட்பாளர்கள் 62 பேர் போட்டியிடுவதால் 30 தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. #BJP #MadhyaPradeshelection

Tags:    

Similar News