செய்திகள்

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்குகிறார்

Published On 2018-11-11 23:07 GMT   |   Update On 2018-11-11 23:07 GMT
ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
ஐதரபாத்:

ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.

கடந்த மாதம் 25-ந் தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (திங்கட்கிழமை) சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடவுளின் கருணையாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக பூரண குணம் அடைந்து விட்டார். எனவே அவர் இன்று முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார்.  #JaganmohanReddy #Yatra 
Tags:    

Similar News