செய்திகள்

ஆந்திராவில் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Published On 2018-11-10 02:55 GMT   |   Update On 2018-11-10 02:55 GMT
ஆந்திராவில் கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவருக்கு ரூ.1000 சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NightyBan #AndhraVillage
நகரி :

பெண்கள் இரவில் தூங்கும் போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான உடை ‘நைட்டி’. ஆனால் தற்போது பெரும்பலான பெண்கள் நைட்டியை பிரதான உடையாக மாற்றிக்கொண்டு பகல் நேரங்களிலும் அதனை அணிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இந்த கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை வேத வாக்காக எண்ணி அதன்படி செயல்படுவது மக்களின் வழக்கம்.



அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்து உள்ளனர். அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு ரூ.1000 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை விரும்பாத அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியப்படுத்தினர். அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அங்குள்ள யாரும் வட்டி இன தலைவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #NightyBan #AndhraVillage
Tags:    

Similar News