செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாமாண்டு நிறைவு - கருப்பு தினமாக அனுசரிக்கும் காங்கிரஸ்

Published On 2018-11-07 00:03 GMT   |   Update On 2018-11-07 00:03 GMT
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாமாண்டு நிறைவையொட்டி, நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Demonetisation #Blackday #Congress
டெல்லி:

கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. அதை தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.யையும் மத்திய அரசு அமல்படுத்தியது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.



கடந்த ஆண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கருப்பு பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள நோட்டுகளை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. முன்பைவிட தற்போது அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
#Demonetisation #Blackday #Congress
Tags:    

Similar News