செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் சிலை- ரூ.330 கோடி செலவில் அமைகிறது

Published On 2018-11-03 06:56 GMT   |   Update On 2018-11-03 06:56 GMT
உத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
லக்னோ:

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார்.

அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

அந்த சமயத்தில் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்திரநாத் பாண்டே கூறியதாவது:-


முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் துறவி ஆவார். ஆயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண புதிய திட்டம் ஒன்றை அவர் தயாரித்துள்ளார். அந்த திட்டத்தை அவர் வருகிற 6-ந்தேதி தீபாவளி தினத்தன்று அயோத்தியில் வெளியிட உள்ளார்.

அதுமட்டுமின்றி அயோத்தியில் மியூசியம், கலை அரங்கம், விமான நிலையம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதியாகும்.

உத்தரபிரதேசத்தில் ராமருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டமும் உள்ளது. சரயூ நதி கரையில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.

இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படும். 36 மீட்டர் உயர பீடத்தில் ராமர் சிலை நிறுவப்படும். இதுபற்றிய அறிவிப்பையும் 6-ந்தேதி முதல்-மந்திரி வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்புகள் வெளியிட்ட பிறகு மிகப்பெரிய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் அத்வானி நடத்திய ரத யாத்திரை போன்று இந்த யாத்திரை அமையும் என்று கூறப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தேதியை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
Tags:    

Similar News