செய்திகள்

ஜெகன்மோகன் தாக்கப்பட்ட விவகாரம் - தெலுங்கு நடிகரை கைது செய்ய ஒய்.எஸ்.ஆர். காங்.வற்புறுத்தல்

Published On 2018-10-30 15:28 IST   |   Update On 2018-10-30 15:28:00 IST
ஜெகன்மோகன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர் சிவாஜியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வற்புறுத்தியுள்ளது. #JaganMohanReddy #Visakhapatnamairport

அமராவதி:

தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி. தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர தேர்தலுக்காக ‘ஆபரேஷன் கருடா’ என்ற பா.ஜனதா திட்டம் ஒன்று வைத்துள்ளது என்றும் அதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் இத்திட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்படுவார். அந்த பழி ஆளும் கட்சி மீது சுமத்தப்படும். அதனால் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்படும். ஒரு நடிகரை தேசிய கட்சி வழிநடத்தும் என்று கூறி இருந்தார்.

அவர் கூறியதுபோல், எதிர்க்கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டனம் விமான நிலையத்தில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். அந்த பழி தெலுங்கு தேசம்கட்சி மீது சுமத்தப்பட்டு இருக்கிறது.


மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நட்புடன் இருந்த நடிகர் பவன் கல்யாண் தற்போது தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து வருகிறார்.

நடிகர் சிவாஜி கூறியது போல் நடப்பதால் அவர் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடா போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், நடிகர் சிவாஜி ஆபரேசன் கருடா என்ற பெயரில் சொன்ன தகவல்கள் நடந்து வருகிறது. எனவே அவருக்கு தற்போது நடக்கும் வி‌ஷயங்கள் அனைத்தும் முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி மீதான தாக்குதல் சம்பவமும் அவருக்கு முன்பே தெரியும். எனவே நடிகர் சிவாஜியை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்று கூறி உள்ளது. #JaganMohanReddy #Visakhapatnamairport

Tags:    

Similar News