செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து - 8 பேர் உடல் கருகி பலி

Published On 2018-10-26 18:44 GMT   |   Update On 2018-10-26 18:44 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் நகரில் உள்ள ராசுல்பூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் துரிதமான மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கிடங்குகள் மற்றும் விற்பனை கூடங்களின் பாதுகாப்பு குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
Tags:    

Similar News