செய்திகள்

சிபிஐ அதிகாரிகள் மீது ஊழல் புகார் - எஸ்ஐடி விசாரணை கோரும் வழக்கை பரிசீலனை செய்கிறது உச்ச நீதிமன்றம்

Published On 2018-10-25 07:43 GMT   |   Update On 2018-10-25 07:43 GMT
சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது. #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges
புதுடெல்லி:

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



இந்த பரபரப்பான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பூஷன் கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி பிரசாந்த் பூஷனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தனர். #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges

Tags:    

Similar News