செய்திகள்

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2018-10-20 04:18 GMT   |   Update On 2018-10-20 04:18 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #JammuAndKashmir #KashmirElection #KashmirULBPolls
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16-ம் தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.



இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு மாவட்டத்தில் பதிவான வாக்குகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர். இதேபோல், பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #KashmirElection #KashmirULBPolls

Tags:    

Similar News