செய்திகள்

பா.ஜனதாவை தோற்கடிக்க ஓரணியில் திரள வேண்டும்- சத்ருகன்சின்கா பேச்சு

Published On 2018-10-16 07:50 GMT   |   Update On 2018-10-16 07:50 GMT
வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று சத்ருகன்சின்கா பேசினார். #BJP #ShatrughanSinha
முசாபர்நகர்:

நடிகர் சத்ருகன்சின்கா பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் அவ்வப்போது அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை முதல்- மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

மோடியை தாக்கிப் பேசி வந்த சத்ருகன்சின்கா இப்போது பா.ஜனதாவையே வீழ்த்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள தாவ்லி கிராமத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் சத்ருகன் சின்கா பேசியதாவது:-

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு வற்புறுத்தலால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்ட் கூறியதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.-ஐ புறக்கணித்து விட்டு ரிலையன்ஸ் ஏன் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவும் கலந்து கொண்டார். அவரும் பிரதமர் மோடியையும் பா. ஜனதாவையும் தாக்கிப் பேசி வந்ததால் பா.ஜனதாவில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். #BJP #ShatrughanSinha #ParliamentElection
Tags:    

Similar News