செய்திகள்

லஞ்சம் வாங்குவதில் தமிழகம் 3வது இடம்- கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2018-10-12 06:34 GMT   |   Update On 2018-10-12 06:34 GMT
லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். #TamilnaduCorruption
புதுடெல்லி:

இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களுக்கு வேலைகள் முடித்துத் தரப்படுவதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் போலீசாருக்கு தான் அதிகம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.


லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சொத்துப்பதிவுக்கு தான் அதிகம் லஞ்சம் பெறப்படுவது தெரியவந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தேசிய அளவில் குறைந்து இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து விட்டது.

2017-ல் காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  #TamilnaduCorruption
Tags:    

Similar News