செய்திகள்

டெல்லியில் 16 இடங்களில் அதிரடி- ஆம்ஆத்மி மந்திரி வீட்டில் வருமானவரி சோதனை

Published On 2018-10-10 10:07 GMT   |   Update On 2018-10-10 10:07 GMT
டெல்லியில் ஆம்ஆத்மி மந்திரி கைலாஷ் கஹ்லாட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 16 இடங்களில் இந்த சோதனையை மேற்கொண்டார்கள். #ITRaid
புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம்ஆத்மி ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் கைலாஷ் கஹ்லாட்.

இவர் மற்றும் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இந்தநிலையில் மந்திரி கைலாஷ் கஹ்லாட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

டெல்லியில் இருக்கும் வசந்த்கஞ்ச், டிபன்ஸ் காலனி, பஸ்லூம் விகார், நப்ஜாகர், லட்சுமி நகர் மற்றும் குர்கானில் இருக்கும் பாலம் விகார் ஆகிய பகுதிகளில் உள்ள மந்திரியின் வீடுகள், நிறுவனங்கள், குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

60-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் 16 இடங்களில் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டார்கள்.

மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு  ஆம்ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை என்று அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வருமான வரி சோதனை தொடர்பாக பிரதமர் மோடி  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் வலியுறித்தியுள்ளார். #ITRaid

Tags:    

Similar News