செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்

Published On 2018-10-03 05:33 GMT   |   Update On 2018-10-03 05:33 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
புதுடெல்லி:

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.

அதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை ஏற்று ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு  பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
Tags:    

Similar News