செய்திகள்

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Published On 2018-10-03 04:51 GMT   |   Update On 2018-10-03 04:51 GMT
திருப்பதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple #PlasticBan

திருமலை:

திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பரிணாமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி நகரின் நிலத்தடி நீர் அளவு குறைந்தது மட்டுமல்லாமல், சுற்றுப்புற மற்றும் சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது.

மேலும், திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் உள்ளதால், அதை உலகத் தரம் வாய்ந்தாக மாற்ற ஆந்திர அரசு முயன்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி நாளான நேற்று முதல் திருப்பதி நகரில், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நகராட்சி முடிவு செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

51 மைக்ரானிற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மோகோலால் செய்யபடும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.


அதற்கு, பதில் துணி மற்றும் சணலைப் பயன்படுத்தி செய்யப்படும் பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றபடி, பால் பாக்கெட்டுகள், ஒரு லிட்டருக்கு மேற்பட்ட குடிநீர் பாட்டில்கள், மருத்துவமனைகளில் மருந்துகளை அளிக்க நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள், அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த திருப்பதி நகராட்சி அனுமதி அளித்துள்ளது.

இதைதொடர்ந்து திருப்பதியில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொது இடத்தில் கொண்டு வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரம் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. #TirupatiTemple #PlasticBan

Tags:    

Similar News