செய்திகள்

இந்தோனேசியாவை தாக்கியது கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத அதிசய சுனாமி- விஞ்ஞானிகள் தகவல்

Published On 2018-10-02 06:22 GMT   |   Update On 2018-10-02 06:41 GMT
இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. #Indonesiaquake #Indonesiaquaketsunami
ஐதராபாத்:

இந்தோனேசியாவில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது.

இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன.

ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுனாமி தாக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கருவிகளிலும் அது பதிவாகவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென சுனாமி ஏற்பட்டு தாக்கியது. இதனால் பெரிய அளவில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.

சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.


சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே கண்டுபிடிக்க இந்தியாவும் கருவிகளை பொருத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையம் இதை கண்காணித்து வருகிறது. அவர்களுக்கும் சுனாமி வருவது பற்றி கருவிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இது சம்பந்தமாக அந்த மையத்தின் டைரக்டர் ஷெனாய் கூறியதாவது:-

நிலநடுக்கம் ஏற்பட்டதுமே கருவிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே இந்தோனேசியா உள்ள சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நாம் கடலில் பொருத்தி உள்ள மிதவைகள், கண்காணிப்பு கருவிகளில் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 3 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதும் அறிகுறி தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அறிகுறி தெரியாததால் வாபஸ் பெறப்பட்டது.

இவ்வாறு ஷெனாய் கூறினார்.

கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் கூறியதாவது:-

சுனாமியை கண்டுபிடிக்கும் கருவியில் எந்தவித அறிகுறியும் பதிவாகவில்லை. இது ஒரு ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கிறது. 2 காரணங்களால் இது கருவியில் பதிவாகாமல் இருந்து இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம். அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம். எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான வி‌ஷயமாகத்தான் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Indonesiaquake  #Indonesiaquaketsunami
Tags:    

Similar News